மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர் தேர்தல் இன்று நடைபெறுகிறது
தமிழகத்தில் 10 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கு மட்டும் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனால் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுகள் போட்டனர்.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 மற்றும் 3-ந் தேதிகளில் எண்ணப்பட்டன.
மொத்தம் உள்ள 515 மாவட்ட கவுன்சிலர், 5,090 ஒன்றிய கவுன்சிலர் உள்பட 91,975 பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
ஊராட்சி தலைவர்கள் மட்டும் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 243 இடங்களையும், அ.தி.மு.க. 214 இடங்களையும் பிடித்தன. இதேபோல், காங்கிரஸ் 22 இடங்களையும், பா.ஜ.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 7 இடங்களையும், தே.மு.தி.க. 3 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 இடங்களையும் பிடித்தன. மற்ற கட்சிகள் 22 இடங்களில் வெற்றி பெற்றன. ஒரு இடத்திற்கு மட்டும் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படவில்லை.
மொத்தம் உள்ள 5,090 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 2,099 இடங்களையும், அ.தி.மு.க. 1,781 இடங்களையும் கைப்பற்றின. இதேபோல், காங்கிரஸ் 131 இடங்களையும், தே.மு.தி.க. 91 இடங்களையும், பா.ஜ.க. 85 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி 62 இடங்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 33 இடங்களையும் கைப்பற்றி இருக்கின்றன. மற்றவர்கள் 795 இடங்களை பிடித்து உள்ளனர். இதில், ஒரு இடத்திற்கு மட்டும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை.
இதுபோக, தேர்தலுக்கு முன்பாகவே, 18,570 பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத்தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகள் தலா 27-ம், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகள் தலா 314-ம், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகள் 9,624-ம் உள்ளன. இந்த பதவிகளுக்குத்தான் இன்று மறைமுக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு இவர்களை தேர்வு செய்வார்கள்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல், ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக முகமை வளர்ச்சி அலுவலகத்திலும், ஒன்றிய தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களிலும், பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கு காலை 11 மணிக்கும், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கு பிற்பகல் 3 மணிக்கும் மறைமுக தேர்தல் நடக்கிறது.
பதவிகளுக்கு போட்டியில்லாத இடங்களில் தலைவர்கள், துணைத்தலைவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
போட்டி இருக்கும் இடங்களில் மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்படும்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி இருந்தாலும், அ.தி.மு.க.வும் அதற்கு நெருக்கமான அளவு இடங்களை பிடித்திருப்பதால், தலைவர்கள், துணைத்தலைவர்களை தேர்ந்து எடுப்பதில் சுயேச்சைகள் ஓட்டு முக்கிய பங்கு வகிக்கிறது. பல இடங்களில் சுயேச்சைகளிடம் குதிரைபேரம் நடந்து, அவர்கள் மறைவான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த பரபரப்புக்கு இடையேதான் இன்று (சனிக்கிழமை) மறைமுக தேர்தல் நடக்கிறது. இதனால் மோதல்கள் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
மேலும் இந்த தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது. இதனால் மறைமுக தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும், தேர்தல் நடவடிக்கை வீடியோ பதிவு செய்யப்படும்.