Tamilசெய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு நடந்து முடிந்துள்ளது. 4 மாவட்டங்களில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மட்டுமே மறுவாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

தேர்தல்  அமைதியாக நடந்து முடிந்தநிலையில் நாளை ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த ஓட்டு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகளை அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் செய்துள்ளனர்.

தேர்தல் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

ஓட்டுப்பதிவு நடைபெற்ற நாள் வரை காணொலி காட்சி வழியாக 38 மாவட்ட கலெக்டர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

இந்தநிலையில் ஓட்டு எண்ணிக்கையை முறையாக நடத்தி முடிப்பதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் தலைமை அலுவலகத்தில் இருந்து அவர் காணொலி காட்சி மூலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.

தபால் ஓட்டு எண்ணுதல், வார்டு வாரியாக ஓட்டுகளை எண்ணி முடிவுகளை தெரிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகள் எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கும் அவர் விளக்கம் அளித்தார்.

வாக்கு எண்ணும் மையங்களில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்தும் விளக்கிக் கூறினார். தேவையான அளவு பாதுகாப்பு வசதிகளை செய்து கொள்ளும்படி ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தினார்.

இந்த ஆலோசனையின் போது செயலாளர் சுந்தர வள்ளி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.