தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் மதுரை மாவட்டத்துக்கும் நள்ளிரவு முதல் வருகிற 30-ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேனி மாவட்டத்திலும் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் பிற மாவட்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருவதால் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.