Tamilசெய்திகள்

மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழைப்பொழிவு கிடைக்கும் என்பதால் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் தூா்வாரப்பட்டு வருகின்றன.

சென்னையில் மழைநீா் கால்வாய்களும் முழுமையாக தூா்வாரப்பட்டு வருகின்றன. முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் சிறப்பு அதிகாரிகளை நியமித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளாா்.

அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் அந்தந்த மாவட்டங்களில் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் இணைந்து செயலாற்ற உள்ளனா்.

இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியா்களுடன் இன்று விரிவாக ஆலோசனை நடத்த உள்ளது.

இந்தக் கூட்டத்தில் தலைமை செயலாளா் இறையன்பு, வருவாய் பேரிடா் துறை முதன்மை செயலாளா், அரசுத்துறை செயலாளா்கள் மற்றும் உயா் அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

வடகிழக்கு பருவமழை ஜனவரி முதல் வாரம் வரை தொடரும் என்பதால் அதற்கேற்ப முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்காக என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளாா்.