மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்கு இ-பாஸ் கட்டாயம்
தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிரமாக அமல்படுத்திய போதிலும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 2,865 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 468 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 33 பேர் பலி ஆனார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 866 ஆக உயர்ந்து இருக்கிறது.
இதைத்தொடர்ந்து நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அ.தி.மு.க. அரசு, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 30.6.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ், கடந்த 19-ந் தேதி இரவு 12 மணி முதல் வருகிற 30-ந் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சில பகுதிகளிலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உத்தரவிடப்பட்டு அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரணம் வழங்க கடந்த 15-ந் தேதி அன்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும், நோய்த்தொற்று நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் அமல்படுத்தியதுபோல் 24-ந் தேதி அதிகாலை 12 மணி முதல் 30-ந்தேதி நள்ளிரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை-எளிய மக்களின் சிரமங்களை குறைக்க, சென்னையில் வழங்கியது போல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்துக்கு தலா ரூ.1,000 வழங்கவும் அதை செயல்படுத்தும் விதமாக, வரும் 27-ந் தேதி முதல் சம்மந்தப்பட்ட துறையினர் அரிசி ரேஷன் அட்டைதாரர்களின் இருப்பிடத்துக்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் நான் உத்தரவிட்டு உள்ளேன்.
மேலும், 24-ந் தேதி அன்று (நேற்று) நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த மாவட்ட கலெக்டர்கள், தற்போது வாகன போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும், மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்றும், எனவே, வாகன போக்குவரத்தில் மண்டல முறைக்கு பதில், இ-பாஸ் இல்லாமல், மாவட்டத்துக்குள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், வேறு மாவட்டங்களுக்கு செல்லவோ, பிற மாவட்டங்களில் இருந்து வரவோ இ-பாஸ் பெற்றே பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இந்த கருத்து ஏற்கப்பட்டு, 25-ந் தேதி (இன்று) முதல் 30-ந் தேதி வரை வாகன போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றும் அரசு முடிவு செய்து உள்ளது.
மேற்குறிப்பிட்ட காலத்தில், பொது பஸ் போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும். கொரோனா நோய் பரவலை தடுக்க, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்கி நோய் பரவலை தடுக்க அரசுடன் இணைந்து செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.