மாலத்தீவு, அந்தமானில் தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் காரணமாக 4-ம் கட்ட ஊரடங்கு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ள பிரதமர் மோடி, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது குறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடாதது அதிர்ச்சியளிக்கிறது.
குறிப்பாக மாலத்தீவு மற்றும் அந்தமானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை தாயகம் கொண்டு வர வேண்டிய அனைத்துப் பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் தமிழக அரசு உடனடியாக முன்னின்று எடுக்க வேண்டும். உணவுக்கே வழியில்லா நிலையில் பசி, பட்டினியோடு அத்தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் திண்டாடி வருவது அவர்கள் குடும்பத்தினரையும் பெரும் மனக்கலக்கத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
இதைப்போல உலகில் பல்வேறு நாடுகளிலும் சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாகத் தாய்த்தமிழகத்திற்கு மீட்டுக்கொண்டுவர வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.