மாலத்தீவின் 8 வது அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார்
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடான மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடை பெற்றது. அதிபராக இருந்த இப்ராஹிம் முகமது சோலிஹ் மற்றும் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் யாருக்கும் கிடைக்கவில்லை.
இதனால் மீண்டும் தேர்தல் நடந்தது. இதில் 53 சதவீத ஓட்டுகள் பெற்று மூயிஸ் வென்றதாக கடந்த அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. எதிர்த்துப் போட்டியிட்ட சோலிஹ் 46 சதவீத ஓட்டுகளைப் பெற்றார்.
இதற்கிடையே, நவம்பர் 17-ம் தேதி மாலத்தீவு அதிபராக முகமது மூயிஸ் பதவியேற்க உள்ளார். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், மாலத்தீவின் 8-வது அதிபராக முகமது மூயிஸ் நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அந்நாட்டு தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். துணை அதிபராக ஹுசைன் முகமது லத்தீப் பதவியேற்றுக் கொண்டார்.
அப்போது பேசிய அதிபர் முகமது மூயிஸ், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிப்பேன். மாலத்தீவில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவத்துக்கும் இடம் அளிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் உள்பட தெற்காசிய தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். இந்தியா சார்பில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கலந்துகொண்டார்.