மாரி 2- திரைப்பட விமர்சனம்
வெற்றி பெற்ற படங்களை இரண்டாம் பாகம் எடுத்து வந்த நிலை மாறி, சுமாரான படங்களை கூட தற்போது இரண்டாம் பாகம் எடுக்க தொடங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் தனுஷின் சுமாரான வெற்றி படமான ‘மாரி’- யின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இந்த ‘மாரி 2’ எப்படி என்பதை பார்ப்போம்.
இரண்டு அசிஸ்டெண்டுகளுடன் பெரிய தாதாவாக வலம் வரும் ரவுடி தனுஷின் உயிருக்கு உயிரான நண்பர் கிருஷ்ணா, அவருக்கு ஒரு தம்பி. தனுஷ் மற்றும் கிருஷ்ணா டீம் ஒரு பகுதியில் ராஜாங்கம் நடத்த, அதே பகுதியில் அவ்வபோது தலையிடும் எதிர் தரப்பு கோஷ்ட்டி ரவுடி தனுஷை போட பல முறை முயற்சித்து தோற்று போகும் நிலையில், போதை பொருள் வியாபாரத்தில் தனக்கு உதவி செய்யுமாறு தனுஷை கேட்க, அதற்கு மறுப்பு தெரிவிக்கும் தனுஷ், கிருஷ்ணாவையும் அந்த வேலையை செய்ய விடாமல் தடுக்கிறார். இதற்கிடையே கிருஷ்ணாவின் தம்பி எதிர் தரப்பு கோஷ்ட்டியுடன் சேர்ந்துக்கொண்டு போதை பொருள் வியாபாரத்தை செய்ய நினைப்பதோடு, தனுஷிடம் இருந்து கிருஷ்ணாவை பிரிக்கவும் முயற்சி செய்கிறார்.
இந்த நிலையில், தனுஷை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியோடு சிறையில் இருந்து தப்பிக்கும் கொடூர கொலை குற்றவாளியான டோவினோ தாமாஸ், தனுஷின் எதிர் தரப்புடன் சேர்ந்துகொண்டு, போதை பொருள் வியாபரத்தை செய்வதோடு, கிருஷ்ணாவின் தம்பியை கொலை செய்து அந்த பழியை தனுஷ் மீது போடுகிறார். இதனால் தனுஷ் மீது கிருஷ்ணா கோபமடைய, கிருஷ்ணா மூலமாகவே தனுஷை கொலை செய்யும் முயற்சியிலும் டோவினோ தாமஸ் ஈடுபடுகிறார். டோவினோ தாமஸின் குறியில் இருந்து காயங்களுடனும், தனது காதலி சாய் பல்லவி உடனும் எஸ்கேப் ஆகும் தனுஷ் தலைமறைவாகிறார்.
இந்த கேப்பில் டோவினோ தாமஸ் அரசியல் செல்வாக்குடன் தனுஷ் ஏரியாவை கைப்பற்றி ராஜாங்கம் நடத்துவதோடு, தனுஷை தேடி கண்டுபிடித்து கொலை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். மறுபக்கம் ஐஏஎஸ் அதிகாரியான வரலட்சுமி, டோவினோ தாமஸ் ஒரு குற்றவாளி என்பதை நிரூபித்து அவருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட, அதற்கு தனுஷின் சாட்சி தேவைப்படுவதால் தலைமறைவாக இருக்கும் தனுஷ் மற்றும் அவரது காதலி சாய் பல்லவியை தேட தொடங்குகிறார்.
தலைமறைவு வாழ்க்கை நடத்தும் தனுஷ், மீண்டும் வந்தாரா, டோவினோ தாமஸை வென்றாரா இல்லையா, என்பது தான் ‘மாரி 2’ படத்தின் மீதிக்கதை.
என்னடா எங்கேயோ கேட்ட கதையாகவும், எப்போதோ பார்த்த படமாகவும் இருக்குதே! என்று யோசிக்கிறீர்களா? கதையை கேட்கும் நீங்களே இப்படி யோசித்தால், முழு படத்தையும் பார்த்த எங்களது நிலையை யோசித்து பாருங்கள்.
‘மாரி’ படத்தின் தொடர்ச்சியை படமாக்குறேன், என்று சொல்லிவிட்டு ‘பாட்ஷா’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களின் காட்சிகளை உருவி இயக்குநர் பாலாஜி மோகன் ‘மாரி 2’ படத்திற்கான கதையை உருவாக்கியிருக்கிறார். காப்பியடிப்பது தமிழ் சினிமாவில் சகஜமான ஒன்றாகிவிட்டது, என்று மனதை தேற்றிக்கொண்டு படத்தை பார்த்தாலும், ஒரு கட்டத்தில் அழுவதை தவிற நம்மால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அந்த அளவுக்கு இந்த படத்தின் மூலம் தனுஷும், இயக்குநர் பாலாஜி மோகனும் “செய்…செய்…என்று நம்பள செய்றாங்க”.
மாரி கெட்டப் தனுஷுக்கு ரொம்பவே பிடித்துவிட்டது போல, அதனால் தான் அந்த கெட்டப் மீது மட்டுமே கவனம் செலுத்தியவர், பாலாஜி மோகன் சொன்ன கதையை கண்டுக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். பஞ்ச் வசனம், மாஸ் நடிப்பு, ஆக்ஷன் காட்சி போன்றவை இருந்தாலே போதும், என்று ரசிகர்களை ரொம்பவே மட்டமாக நினைத்திருக்கும் தனுஷ், ‘வட சென்னை’ என்ற ஒரு படத்தில் நடித்துவிட்டு, அதே பாணியிலான ஒரு கதையை இப்படி காமெடி செய்திருப்பது ரசிகர்களை கண்கலங்க வைத்துவிடுகிறது.
தனுஷை துரத்தி துரத்தி காதலிக்கும் ஆட்டோ ஓட்டுநரான சாய் பல்லவி, தனக்கு கொடுக்கப்பட்ட வேலை சரியாக செய்திருக்கிறார். தனுஷ் அவரை என்ன தான் கலாய்த்தாலும், காதலில் கண்ணும் கருத்துமாக இருக்கும் சாய் பல்லவியின் பர்பாமன்ஸ் பலே சொல்ல வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் டோவினோ தாமஸின் தோற்றமும், ஆக்ரோஷமும் அவரது வேடத்தை ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்ள செய்கிறது. தனுஷின் நண்பராக வரும் கிருஷ்ணாவின் வேடம் சுமார் தான். ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் நடிப்பு கம்பீரமாக உள்ளது.
மாரியில் காமெடியில் கலக்கிய வினோத் மற்றும் ரோபோ சங்கர் கூட்டணி இதிலும் கலக்கியிருக்கிறார்கள். இவர்களது டைமிங் வசனங்கள் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையில் “ரவுடி பேபி…” ஏற்கனவே பெரிய ஹிட்டாகியிருக்கும் நிலையில், விஷுவலாகவும் ரசிக்க வைக்கிறது. ஆனால், இளையராஜாவின் குரலில் உருவான அந்த பாடல் பெரிதாக எடுபடவில்லை. பின்னணி இசையும் ஓகே ரகம் தான்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் கேமரா படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் கேமரா சுழன்றிருக்கும் விதம் சூப்பர் சொல்ல வைக்கிறது.
இயக்குநர் பாலாஜி மோகன், திரைக்கதையை காமெடியாக உருவாக்க நினைத்தாரா அல்லது சீரியஸாக உருவாக்க நினைத்தாரா என்பது எந்த இடத்திலும் தெளிவாக தெரியவில்லை. மாறாக, என்ன சொல்ல வருகிறார்?, என்ன சொல்ல போகிறார்?, என்பது தான் படம் முழுவதும் ரசிகர்கள் மனதில் எழும் கேள்விகளாக இருக்கிறது.
தனுஷ் என்ற மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு எது செய்தால் வெற்றி பெறலாம், எதையெல்லாம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள், என்று யோசிக்காமல் எதை எதையோ யோசித்து, எப்படி எப்படியோ கதையை நகர்த்திச் செல்லும் இயக்குநர் பாலாஜி மோகன், இறுதியில் தனுஷுக்கு பிடித்த மாரியை அலங்கோலப்படுத்தி விடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘மாரி 2’-வில் “செஞ்சுடுவேன்…” என்று தனுஷ் சொல்வது குறைவாக இருந்தாலும், இயக்குநர் பாலாஜி மோகன், ரசிகர்களை செஞ்சது ரொம்ப அதிகம்.
-ஜெ.சுகுமார்