மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் காரை பரிசளித்தனர். மாமன்னன் திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ஜூலை 27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “நான் பார்ட்டிக்கு தாமதமாக வந்துள்ளேன். மாமன்னன் மிகவும் சிறந்த திரைப்படம். படக்குழுவினர் அனைவரும் நன்றாக வேலை பார்த்துள்ளனர். படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் மீளவில்லை. உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், ஏ.ஆர்.ரகுமான், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.