சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மானிய விலையில் வழங்கி வருகிறது.
அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானியத் தொகை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு மேல் பயன்படுத்தினால் மானியம் இல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்களுக்கு மானியம் இல்லாத சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.
14.2 கிலோ எடை கொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1-ந்தேதி கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படுகிறது.
அதன்படி இன்று (1-ந்தேதி) சமையல் கியாஸ் விலையை இந்திய எண்ணை நிறுவனங்கள் மாற்றி அறிவித்துள்ளன. இதனால் மானியம் இல்லாத கியாஸ் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.19, மும்பையில் ரூ.19.50, சென்னையில் ரூ.20, கொல்கத்தாவில் ரூ.22 அதிகரித்துள்ளது.
டெல்லியில் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.695-ல் இருந்து ரூ.714 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.725.5-ல் இருந்து ரூ.747 ஆகவும் உயர்ந்துள்ளது. மும்பையில் ரூ.665-ல் இருந்து ரூ.684.50 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த நவம்பர் மாதம் மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.696 ஆக இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 18 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மானியம் இல்லா சிலிண்டர் விலை ரூ.714 ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் சிலிண்டர் விலையில் ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே இந்த மாதம் முதல் சென்னை நகர மக்கள் மானியம் இல்லா சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.734 கொடுக்க வேண்டும். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வந்து இருப்பதாக எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சென்னையில் கடந்த ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு 5 தடவை மானியம் இல்லா சமையல் கியாஸ் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் கடந்த 6 மாதங்களில் மட்டும் சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.140 உயர்ந்து இருப்பது தெரியவந்துள்ளது.
19 கிலோ எடை கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கான எரிவாயு விலையும் இன்று கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக நிறுவனங்களுக்கான எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.1333 ஆக இருந்தது.
அந்த எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.30 அதிகரித்து எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் சென்னையில் வர்த்தக நிறுவனங்களுக்கான கியாஸ் விலை இன்று ரூ.1363 ஆக உயர்ந்துள்ளது.