Tamilசெய்திகள்

மாநில அரசை கேள்வி கேட்காமல் மத்திய அரசி அண்ணாமலை கேள்வி கேட்க வேண்டும் – அமைச்சர் மனோ தங்கராஜ்

நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் போதை பொருட்களை படிப்படியாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு பால் வரியை உயர்த்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கியாஸ் விலையையும் உயர்த்தி இருக்கிறது. தமிழகத்தில் நிதி சுமைக்கு மத்தியிலும் வரி உயர்த்தப்படாமல் உள்ளது. அதே சமயம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வரியை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழகத்தில் வேட்டி, சேலை கொடுக்கும் திட்டத்துக்கு மூடு விழா நடத்துவதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக கேட்கிறீர்கள். ஆனால் அவர், அரசு என்ன செய்கிறது? என்ன செய்யப்போகிறது? என்பதை பற்றி தெரியாமல் பேசி வருகிறார்.

தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் பொறுப்பேற்றால் கூட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசு ஜி.எஸ்.டி.யால் மக்களை நசுக்கி வருகிறது. எனவே பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மாநில அரசுக்கு பதிலாக மத்திய அரசை கேள்வி கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.