பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. இதனால் அவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி மூன்று நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். முதல்வர் பரிந்துரையை ஏற்று நேற்று பதவி பிரமாணம் செய்து வைப்பார் என திமுக-வினர் எதிர்பார்த்தனர். ஆனால் பொன்முடி அமைச்சராவதற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் திமுக எம்.பி. வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஆளுநர் ஆர்.என். ரவி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும். ஆளுநர் மறுப்பு தெரிவித்தது உச்சநீதிமன்ற அவமதிப்பாகவும் கொள்ள வேண்டியுள்ளது. அமைச்சராக நியமிக்கப்படுபவர்களின் தகுதிப்பாடு குறித்த முதலமைச்சரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வி எழுப்ப முடியாது.
தமிழக அரசுடன் ஆளுநர் கடைப்பிடிக்கும் மோதல் போக்கு கொஞ்சமும் வியப்பளிக்கவில்லை. ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த ஆளுநர் முயற்சி. அரசியலமைப்பு, சட்டங்கள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிக்காத ஆளுநர் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆளுநர் ஆர்.என். ரவியை குடியரசு தலைவர் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு திமுக எம்.பி. வில்சன் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.