மாநில அந்தஸ்து வழங்காமல் பா.ஜ.க அரசு புதுச்சேரி மக்களை பழி தீர்க்கிறது – முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவோம் என என்.ஆர்.காங்கிரஸ் மக்களிடம் தெரிவித்து தேர்தலை சந்தித்தது தேர்தல் நேரத்தில் புதுவைக்கு வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என கூறியிருந்தார். ஆனால் இவை இரண்டுமே நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டுவரை முதல்-அமைச்சர்கள் மாநாட்டிலும், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்கும்போதும், தொடர்ந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என நான் வலியுறுத்தினேன்.

சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பினோம். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த கோப்பை கிடப்பில் போட்டது. மாநில அந்தஸ்து கொடுத்தால், காங்கிரஸ் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடும் என்பதற்காகவும், களங்கம் விளைவிக்கும் எண்ணத்தோடும் தீர்மானத்தை ஏற்கவில்லை.

இப்போது மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான ஆட்சிதானே நடக்கிறது. இவர்களால் ஏன் மாநில அந்தஸ்து பெற முடியவில்லை. இதிலிருந்து தெள்ளத்தெளிவாக பிரதமர் மோடி, புதுவை மாநில மக்களை பழிவாங்குகிறார் என தெரிகிறது. பா.ஜனதா புதுவை மக்களை உதாசீனப்படுத்துகிறது.

மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய அரசு கைவிரித்துள்ள நிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வர தயாரா? பா.ஜனதாவின் அடிமை ஆட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி நடத்துகிறார். 5 ஆண்டும் மாநில அந்தஸ்து பெறுவோம் என கூறியே முதல்- அமைச்சர் தனது ஆட்சியை நடத்துவார். அவரால் மாநில அந்தஸ்து பெற முடியாது. மாநில அந்தஸ்து என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி ரங்கசாமி ஆட்சி நடத்துகிறார்.

இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news