வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் 12-ந்தேதி தொடங்க உள்ளது. இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார்.
பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் மாநாடு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதர நடிகர்கள் குறித்த தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா, இப்படத்தில் சிம்புக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.