X

மாநகர பேருந்து மோதி வழிக்காட்டி பலகை விழுந்து பலியான வாலிபர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அறிவித்தார்

சென்னை ஆலந்தூரில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வழிகாட்டி பலகை திடீரென சரிந்து விழுந்தது. தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற மாநகர பேருந்து கத்திப்பாரா அருகே அதிவேகமாக வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை வழிகாட்டி பலகை தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.

அதில் வழிகாட்டி பலகையின் ராட்சத இரும்பு தூண் உடைந்து சரிந்து, சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது தூண் விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன. இதில் 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது. ராட்சத இரும்புத் தூண் விழுந்ததால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய மாநகர பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் போக்குவரத்து போலீசில் சரண் அடைந்தனர். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முக சுந்தரம் (28), சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்நிலையில், பேருந்து மோதியதில் வழிகாட்டி பலகை விழுந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். உயிரிழந்தவர் குடும்பத்துக்கு போக்குவரத்துக் கழக நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாயும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாயும், ஆக மொத்தம் 3 லட்சம் ரூபாயினை நிவாரணமாக வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்நிதியினை நேரில் சென்று வழங்கினார்.