X

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சொத்து வரி உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம்
பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022-ம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு
ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கீழ்க்கண்டவாறு சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.

600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு
கட்டிடங்களுக்கு 50 சதவீதம் மட்டும் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. 1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் மட்டும் சொத்து வரி
உயர்த்தப்படுகிறது. 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்பட உள்ளது.

தற்போது உள்ள சொத்து வரியில், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்படுகிறது.

அதேபோன்று, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர 20 மாநகராட்சிகளில், சொத்து மதிப்பு உயர்வு 2022-23-ம் நிதியாண்டில் உயர்த்தப்பட உள்ளது.

அதன்படி, சென்னையின் பிரதான நகர பகுதியில் 600 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், சென்னையோடு 2011-ல் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர
மாநகராட்சிகளில் 25 சதவீதம் உயர்த்திடவும், மேலும், சென்னையின் பிரதான நகர பகுதிகளில் உள்ள 600-1,200 சதுர அடிபரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம், 1,201-1,800 சதுர அடி
பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 150 சதவீதம் உயர்த்தவும், சென்னையோடு 2011-ல்
இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில், 600-1.200 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம், 1201-1800 சதுர அடி பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75
சதவீதம், 1,801 சதுர அடிக்கு மேல் பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கான சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

சென்னையின் பிரதான நகர பகுதிகளில் வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், சென்னையோடு 2011-ல்
இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு 100 சதவீதம், தொழில் மற்றும் கல்வி நிலையங்களுக்கு 75 சதவீதம், சொத்து வரியினை
உயர்த்த நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,200 சதுர அடிக்கும்
குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் 62.40 சதவீதமும் ஆகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் பிற 20
மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 சதவீதமும் அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பாதல் இந்த வரி
உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.

தற்போது, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன்
ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர
மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.