Tamilசெய்திகள்

மாநகராட்சி, நகராட்சிகளுக்கு பிப்ரவரி மாதம் தேர்தல்!

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 32 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.

இந்த உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து, 794 உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில் நகர் பகுதிகளில் 12 ஆயிரத்து 820 உறுப்பினர் பதவியும், கிராமப் பகுதிகளில் 1 லட் சத்து 18 ஆயிரத்து 974 உறுப்பினர் பதவிகளும் இருக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டதால் தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வந்தது.

நேற்று கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்தார். அதன்படி ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற வெள்ளிக்கிழமை (6-ந்தேதி) தொடங்க உள்ளது. கிராம பஞ்சாயத்து அமைப்புகளில் உள்ள 1 லட்சத்து 18 ஆயிரத்து 974 பதவி இடங்களுக்கு 6-ந்தேதி மனுதாக்கல் தொடங்கி நடைபெறும். 27, 30-ந்தேதிகளில் ஓட்டுப்பதிவு நடந்த பிறகு ஜனவரி 2-ந்தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும்.

கிராம பஞ்சாயத்தில் உள்ள தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஜனவரி 4-ந்தேதி முடிந்து விடும். ஜனவரி 6-ந்தேதி கிராம பஞ்சாயத்துக்களில் உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள். அத்துடன் கிராம பஞ்சாயத்து தேர்தல் முழுமையாக நிறைவு பெறும்.

கிராம பஞ்சாயத்துத் தேர்தல் முடிந்த பிறகு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய மூன்று உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் நடத்தப்படும். இதற்கான ஆய்வை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் உள்ள தலைவர் பதவிக்கு இதுவரை நடந்து வந்த நேரடி தேர்தலை, மறைமுக தேர்தலாக மாற்றி சமீபத்தில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது.

இந்த மறைமுக தேர்தலுக்கு தேவையான சட்ட விதிகளில் மாற்றம் செய்யவும், மறைமுக தேர்தலை நடத்துவதற்கான நடைமுறை நெறிமுறைகளை ஏற்படுத்தவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தால்தான் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

மறைமுக தேர்தலுக்கான நடைமுறை ஏற்பாடுகளை செய்து முடிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு இன்னும் சிறிது நாட்கள் தேவைப்படுகிறது. தற்போது நடந்து வரும் அந்த ஏற்பாடுகள் திட்டமிட்டப்படி முடிந்து விட்டதால் உடனடியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி அட்டவணையை தேர்தல் ஆணையத்தால் அறிவிக்க முடியும்.

தற்போதைய நிலவரப்படி மறைமுக தேர்தலுக்கான ஏற்பாடுகள் இன்னும் 3 வாரங்களுக்குள் முடிந்து விடும்.

அதன் பிறகு ஜனவரி மாத தொடக்கத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி வெளியிடப்படும். கிராம பகுதி தேர்தல் முழுமையாக முடிந்ததும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அப்படி அட்டவணை வெளியிடப்பட்டால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஜனவரி மாத இறுதியில் அல்லது பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும். இந்த தகவலை மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. எனவே திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி நிர்வாகத்தை 50 சதவீதம் பெண்கள் மேற்கொள்வார்கள்.

குறிப்பாக கிராம உள்ளாட்சி நிர்வாகத்தை முதன் முதலாக 50 சதவீதம் பெண்கள் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது உள்ளாட்சி பணிகளை தாமதமின்றி, நேர்த்தியாக செய்து முடிக்க உதவியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *