தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.
நடிகை நயன்தாரா நடிப்பு மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் ‘9 ஸ்கின்’ (9 Skin) என்ற அழகு சாதன பொருட்கள் விற்கும் நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, ‘ஃபெமி 9’ (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். இதன் வெற்றி விழா நடைபெற்றது. இதில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா, “மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் போய் சேரவில்லை என நினைக்கிறேன். இதற்கு முன்பு எந்த சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் சொன்னது கிடையாது. ஆனால் இன்றைக்கு ஒரு மேடையில் இவ்ளோ ஆண்கள், நிறைய பெண்கள் இருக்கும் இடத்தில், அனைவரின் முன்னாடி சானிட்டரி நாப்கின் என்று சொல்றோம். அதுவே மிகப்பெரிய மாற்றம். ‘ஃபெமி 9’ நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச் சேர வேண்டும். அதற்கு தேவையான சுகாதாரம் நிறைந்த சானிட்டரி நாப்கின் கொடுக்க வேண்டும்” என்றார்.