மாதம் தோறும் 15 ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறைப்படி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தார்கள். தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்ட நிலையில், நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது.
இந்நிலையில், இனிமேல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் 15-ந்தேதி வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு தேர்வான அனைத்து மகளிருக்கும் ரூ.1000 சென்றடைந்தது. வங்கிகளில் 1-ந்தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படாத வண்ணம் 15-ந்தேதி வரவு வைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.