மாணிக்- திரைப்பட விமர்சனம்
‘நாளைய இயக்குநர்கள்’ நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு முன்னணி இயக்குநர்கள் பலரை தனது குறும்படத்தின் மூலம் வியக்க வைத்த மார்ட்டின், இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் பேண்டசி காமெடிப் படமான ‘மாணிக்’ எப்படி என்பதை பார்ப்போம்.
ஹீரோ மா.கா.பா.ஆனந்த் ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்கிறார். அந்த இல்லத்தில் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பாட்டி தீவிர கிரிக்கெட் ரசிகராக, அதுவும் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விசிரியாக இருக்க, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தடை செய்யப்பட்ட செய்தியை அறிந்து, சோகத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார். இதனால் அப்செட்டாகும் மா.கா.பா.ஆனந்தும், அவரது நண்பர் வத்சனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்க வேண்டும் என்று முடிவு எடுப்பதோடு, அதற்காக பணம் சம்பாதிக்க ஆசிரமத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த நிலையில், மா.கா.பா.ஆனந்துக்கு வரம் ஒன்று கிடைக்க, அந்த வரத்தை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடும், ஆனந்தும், அவரது நண்பரும் ஆரம்பத்தில் அமர்க்களமாக சம்பாதித்தாலும், ஒரு கட்டத்தில் அந்த வரத்தினாலேயே ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள். பிறகு அதில் இருந்து மீண்டு வந்தார்களா இல்லையா, அது என்ன வரம், அதனால் அவர்களுக்கு வந்த பிரச்சினை என்ன, என்பதை லாஜிக் பார்க்காமல் பேண்டசியாகவும், கலகலப்பான காமெடியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
மா.கா.பா.ஆனந்த் நடித்த படங்களிலேயே அவருக்கு இது தான் பெஸ்ட் படம் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவரை ஸ்டைலாக காட்டியிருக்கிறார்கள். இந்த கதைக்கு எந்த மாதிரி நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களோ அதுபோல தனது பணியை சரியாக செய்திருக்கும் மா.கா.பா.ஆனந்த், முடிந்த அளவுக்கு தனது காமெடி மூலம் சிரிக்க வைத்து விடுகிறார்.
படத்தின் இரண்டாவது ஹீரோவான வத்சன், தனது வெகுளித்தனமான நடிப்பால் கவர்வதோடு, சிரிக்கவும் வைக்கிறார். யோகி பாபு சில காட்சிகள் வந்தாலும், தனது ஸ்டைலில் ரசிகர்களை நிறைவாக சிரிக்க வைக்கிறார்.
ஹீரோயின் சூசா குமார் படத்தில் நடித்திருப்பதை விட பாடல் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் மட்டும் இன்றி காமெடிக் காட்சிகளிலும் நல்லபடியான பர்பாமன்ஸை கொடுத்திருக்கிறார்.
வில்லனாக பல படங்களில் பார்த்த அருள்தாஸ், இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும், இதுவரை காட்டாத புதுவிதமான வில்லத்தனத்தை இதில் காட்டியிருக்கிறார். அதிலும், அவர் டென்ஷனாகிவிட்டால் சிகரெட்டை ஊதி தள்ளுவது போல, தனது அருகில் இருப்பவர்களை கொலை செய்யும் காட்சிகள் தமிழ் சினிமாவின் சவுண்ட் வில்லன்களை கலாய்ப்பதோடு, நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி சரமாகவும் இருக்கிறது.
கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத ஒரு களத்தில் பயணித்திருக்கும் இயக்குநர் மார்ட்டின், எந்தவித லாஜிக் பற்றியும் யோசிக்காமல், இப்படத்தின் திரைக்கதையையும் காட்சிகளையும் கையாண்டிருக்கிறார். படம் பார்ப்பவர்கள் சிரித்தால் மட்டும் போதும் என்று நினைத்திருக்கும் இயக்குநர் மார்ட்டின் அதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதை ரொம்ப நிறைவாகவே செய்திருக்கிறார்.
எம்.ஆர்.பழனிக்குமாரின் ஒளிப்பதிவும், தரன்குமாரின் இசையும் படத்தை தூண்களாக தாங்குகிறது. பாடல்கள் கேட்கும்படியும் ரசிக்கும்படியும் இருக்கின்றன.
சில காட்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதது போல இருந்தாலும், மா.கா.பா.ஆனந்துக்கு கிடைக்கும் வரத்தின் மூலம் நடக்கும் சம்பவங்கள் அந்த குறையை மறைத்துவிட்டு ரசிகர்களை சிரிக்க வைத்துவிடுகிறது. அதிலும், பாம்பு கடித்து ஒருவர் உயிரிழக்கும் காட்சியில் சிரிக்க வைப்பதோடு, “இங்கு சிறுநீர் கழிக்காதீர்கள்” என்ற வாசகத்தை காட்டி, மீறுபவர்களுக்கு இப்படி ஒரு தண்டனை கிடைக்க வேண்டும், என்பதை கூறி சமூக பொறுப்புடன் இயக்குநர் மார்ட்டின் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
இப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார்களே! என்று சில காட்சிகள் புலம்ப வைத்தாலும், எதை எதையோ சொல்லி எப்படியோ சிரிக்க வைத்துவிடுகிறார்களே! என்று முழு படத்தையும் பார்த்தவர்களிடம் இருந்து பாராட்டையும் படம் பெற்றுவிடுகிறது.
மொத்தத்தில், இந்த ‘மாணிக்’ சிரிப்புக்கு கியாரண்டியானவர்.
-ஜெ.சுகுமார்