மாணவியை 9 வருடங்களாக பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 97 வருடங்கள் சிறை தண்டனை!
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தாய்மாமன் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 9 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சட்டப்பணிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.
இதையடுத்து அந்த மாணவியிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சட்டப்பணிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து மஞ்சேஸ்வர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் சிறுமி தெரிவித்தார். தாய்மாமா மீது புகார் கூறிய அந்த மாணவி தனது தாயுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். தந்தை பிரிந்து சென்றதால் தாய் பராமரிப்பில் மட்டும் இருந்து வந்த அந்த மாணவியின் வீட்டுக்கு தாய் வழி மாமாவான மஞ்சேஸ்வரத்தை சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்கவர் வந்து சென்றபடி இருந்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர், ஊருக்கு வரும்போது மாணவியின் வீட்டுக்கு மாமா என்ற முறையில் வந்திருக்கிறார். அவ்வாறு வரும்போது மாணவியை பாலியல் பாலாத்காரம் செய்திருக்கிறார். மாணவி ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு படித்தது வரை பல முறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.
சிறுமி என்றும் பாராமல், 6 வயது முதல் 13 வயது வரை 9 ஆண்டுகளாக சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மாணவியின் தாய்மாமன் மீது கற்பழிப்பு, ஆணாதிக்கம், 12 வயதுக்குட்பட்ட குழந்தையை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது, போக்சோ உள்ளிட்ட 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
அதன்பேரில் மாணவியின் தாய்மாமாவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு காசர்கோடு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், மாணவியின் தாய்மாமா மீது கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், அவருக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மாணவியின் தாய்மாமா மீது சுமத்தப்பட்ட 9 மோசமான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு 2 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்த காசர்கோடு கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி மனோஜ், மாணவியின் தாய்மாமாவுக்கு மொத்தம் 97 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 8.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
தண்டனை காலத்தை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டது மட்டுமின்றி, அபராத தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.