Tamilசெய்திகள்

மாணவியின் கடிதத்திற்கு உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொன்னேரியை சேர்ந்த வழக்கறிஞர் ஏ. பாஸ்கரின் 7 வயது மகள் அதிகை முத்தரசி அப்பகுதியில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர கோரியும், ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து தரக்கோரி பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் மனு அளித்தார்.

ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாணவி அதிகை முத்தரசி தனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ந் தேதி அன்று நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன்- ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு மாணவர்களின் கல்வி விவகாரத்தில் அரசு வரட்டு கவுரவம் பார்க்க கூடாது என கண்டித்ததோடு ஓராண்டுக்குள் புதிய பள்ளி கட்டிடம் கட்டித்தர வேண்டும் ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளிக்குச் சொந்தமான இடத்தை மீட்டு விளையாட்டு மைதானம் அமைத்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஒரு ஆண்டுக்கு மேலாகியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்பாக வழக்கின் மனுதாரர் மற்றும் பள்ளி மாணவி என்ற முறையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாணவி அதிகை முத்தரசி புகார் கடிதம் ஒன்றை பதிவு தபால் மூலம் அனுப்பினார்.

அதில் பள்ளியை சீரமைக்க கோரி நீதிமன்றம் அளித்த உத்தரவை அதிகாரிகள் கிடப்பில் போட்டு உள்ளதால் தனது புகார் கடிதத்தின் மீது முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

பத்திரிகைகளில் வெளியான இந்த செய்தியை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நேரில் சென்று பள்ளியின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். வழக்கு தொடர்ந்த மாணவி அதிகை முத்தரசி, அவரது தந்தை பாஸ்கரன் ஆகியோரிடம் வழக்கு தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

மனு சிறியவரிடம் இருந்து வருகிறதா, பெரியவரிடம் இருந்து வருகிறதா என பார்த்து, மனுவின் உண்மைத்தன்மை குறித்து அறிந்து எந்த பிரச்சினையாக இருந்தாலும், குழந்தைகள், ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை விடுக்க வேண்டும் என்று முதல்வர் என்னிடம் கூறினார்.

பள்ளிக்கூடம், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விடக்கூடாது என அதிகை முத்தரசியின் தந்தை தெரிவித்தார். மக்களிடம் கருத்து கேட்டு நீதிமன்றம் என்ன சொல்கிறதோ, நல்ல முடிவை நிர்வாகம் எடுக்கும் என்று உறுதி கூறுகிறேன். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடர் ஆய்வு நடத்தி ஆக்கிரமித்து இருந்தால் மீட்கப்படும்.

12-ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வு குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள், கல்வியாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் எனவும், மாணவர்களின் உடல்நலன் பாதிக்க கூடாது என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருப்பதால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உள்ள 19 பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அறிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

கோடைக்கால விடுமுறையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக உடனடியாக நிதி ஒதுக்கப்படும் .

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அதிகை முத்தரசி, தந்தை பாஸ்கரன் எழுதிய குறுந்தமிழ் பெயர்கள் பெருந்தமிழ் பெயர்கள் புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் பொன்னய்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய சேர்மன் ரவி மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.