மாணவிகள் மூலம் பொய் பாலியல் புகார் அளிக்க வைத்து 3 ஆசிரியர்களை சிக்க வைத்த தலைமை ஆசிரியர்!

மதுரை கருப்பாயூரணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வைத்திருந்த புகார் பெட்டியில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு கடிதம் கிடந்தது. அதில், பள்ளியில் உள்ள 2 ஆசிரியைகள் மற்றும் ஒரு ஆசிரியர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் போலீசுக்கும், மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கும் தகவல் கொடுத்தார். இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு நடத்திய விசாரணை அடிப்படையில், முதற்கட்டமாக பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் என 3 பேர் மீது கருப்பாயூரணி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, போக்சோ வழக்கில் சேர்க்கப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒரு புகார் அளித்தார். அதில் சக ஆசிரியர்கள் மீதான விரோதப்போக்கில் மாணவிகளை வைத்து, பொய் புகாரை தலைமை ஆசிரியர் அளித்துள்ளதாக தெரிவித்து இருந்தார். எனவே இதுபற்றி விசாரணை நடத்துமாறு, தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி புலன் விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 2 மாணவிகள், அவர்களின் பெற்றோர் மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்களிடம் ஊமச்சிகுளம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

அப்போது அந்த மாணவிகள், தாங்களாக அந்த கடிதத்தை எழுதவில்லை என்றும், பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதால்தான் அவ்வாறு செய்தோம் எனவும், யாரும் எங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக கோர்ட்டு நடத்திய விசாரணையிலும் இது உறுதி செய்யப்பட்டது. ஆசிரியர்களுக்கிடையே ஏற்பட்ட பகையில், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகளை பழிவாங்க மாணவிகளை பகடைக்காயாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பயன்படுத்தி பாலியல் புகார் அளிக்க வைத்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, இதுகுறித்து இறுதி அறிக்கை, கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி, மதுரை மாவட்ட போக்சோ கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையிலும், வழக்கின் சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும் கடந்த 31-ந் தேதி பொய் புகார் என தீர்ப்பளித்து, வழக்கு முடிக்கப்பட்டது. மேற்கண்ட தகவல்கள் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தனது சுயலாபத்திற்காக மாணவிகளை பொய் புகார் அளிக்க வைத்த தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools