Tamilசெய்திகள்

மாணவர் நவீன் மரணத்திற்கு நீட் தேர்வும் ஒரு காரணம் – முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி

போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் பரிதவிக்கும் நிலை மற்றும் அங்கு கர்நாடக மாணவர் நவீன் கொல்லப்பட்டது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான குமாரசாமி கூறியதாவது:-

போர் நடைபெறும் உக்ரைனில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் நவீன் மரணம் அடைந்திருப்பது, நீட் தேர்வின் பிரதிபலிப்பாகும்.

நவீன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96 சதவீதமும், 12ம் வகுப்பு தேர்வில் 97 சதவீதமும் மதிப்பெண் பெற்றுள்ளார். அப்போதும், இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக சதவீத மதிப்பெண் பெறுவது எளிதானது அல்ல. இருந்தும் மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. இதனால் நவீன் தனது மருத்துவக் கனவை நனவாக்குவதற்காக உக்ரைன் சென்றார். அவரது மரணத்திற்கு யார் பொறுப்பு?

தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு மறுக்கப்படுகிறது.

அரசு கல்லூரி மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது இயலாத காரியம். இந்த உண்மையை உணர்ந்து, பயிற்சி மையங்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்தி நவீன் போன்ற மாணவர்களின் சடலங்களின்மீது ஆட்டம் போடுகின்றன. நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பின்னணியில் இருப்பது யார்?. அதன் பின்னணியில் மத்திய அரசு செயல்படுகிறதா என சந்தேகம் எழுகிறது. பணக்காரர்களுக்கு உயர்கல்வி வழங்க மட்டுமே உள்ள நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.