மாணவர் சீருடை அணிந்து வந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர்
ஆசிரியராக பணியை தொடங்கி நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவரது நினைவாக அவருடைய பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை வளமுடைய தாக்கவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்படும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளியில் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தில் இருந்து 6 ஆசிரியர்களை தமிழக பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்தது.
அவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் கே.ராமச்சந்திரன் என்பவரும் ஒருவராவார். இறுதியில் அவர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
தமிழகத்தில் இருந்து இவர் மட்டுமே நல்லாசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருதை வழங்கினார். கொரோனா காலத்தில் அரசு பள்ளியில் படித்த குழந்தைகளின் கல்வி தடைபட்டது. இதையடுத்து அவர்களுக்கு கல்வி கிடைக்கும் வகையில் ஆசிரியர் ராமச்சந்திரன் தனது சொந்த செலவில் செல்போன்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தார்.
மேலும் தான் பணிபுரியும் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் யூடியூப்பில் தனி கணக்கு தொடங்கி மாணவர்களின் தனித்திறனை வெளிப்படுத்த வழி செய்துள்ளார். அதுமட்டுமின்றி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு திருக்குறளை கற்று கொடுத்து, திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடம் விதைத்து வருகிறார்.
மேலும் தனது கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டி.என்.பி.எச்.பி. போட்டி தேர்வுக்கு பயிற்சி வழங்கி கிராமத்து இளைஞர்களை அரசு ஊழியர்களாக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார். இதன் காரணமாகவே இவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
நல்லாசிரியர் விருது பெற்ற ராமச்சந்திரனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆசிரியர் ராமச்சந்திரன் பள்ளிக்கு தினமும் வரும்போது மாணவர்களின் சீருடை அணிந்தே வருவார். தானும் ஒரு மாணவன் தான் என்பதை வெளிக்காட்டும் வகையிலும், மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே இடைவெளி இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாகவும் அவர் பள்ளி சீருடை அணிந்து வகுப்பு எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் போதும் அவர் பள்ளி சீருடை அணிந்தே வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் ராமச்சந்திரன் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது வாங்கும் வீடியோவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு, பாராட்டு தெரிவித்துள்ளார்.