குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அசாம், திரிபுரா, டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது. டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டமும் கலவரமாக மாறியது. பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதில் 35 பேர் காயமடைந்தனர்.
மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, தற்போது 10 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் யாரும் மாணவர்கள் இல்லை. கைது செய்யப்பட்ட 10 பேரும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இன்றும் நீடிக்கிறது.