மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெறவில்லை – உள்துறை அமைச்சகம் விளக்கம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பேருந்துகள், போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கற்கள் வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தும் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். மாணவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், மாணவர்களின் போராட்டத்தின்போது, மாணவர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வன்முறை தொடர்பாக ஏற்கனவே 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், சமூக விரோத சக்திகள் கண்காணிக்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.