மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ் – திமுக தேர்தல் அறிக்கையில் சலுகைகள்

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கவேண்டும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும்.

மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புறங்களுக்கு 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். அகதிகள் முகாம்களில் உள்ள அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சலுகை வழங்கப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும். காவிரி டெல்டா பகுதியானது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும். கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும்.

இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools