எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்து ரிலீஸான படம் ‘சுந்தர பாண்டியன்’. 2012-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு ‘இது கதிர்வேலன் காதல்’ மற்றும் ‘சத்ரியன்’ ஆகிய படங்களை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன். சமீபத்தில் இவர் இயக்கிய ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ திரைப்படம் திரையரங்கில் வெளியானது.
தற்போது தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரையங்கில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் செயின்ட் தாமஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும் போது, நான் பொதுவாக கல்லூரி விழாக்களில் அதிகம் கலந்துக் கொள்வதில்லை. காரணம் மாணவர்கள் மீது சினிமாவை திணிக்க கூடாது என்பதற்காகத்தான். ஆனால், இன்று விழாவில் கலந்து கொள்ள காரணம், விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் விழா என்பதால் தான் வந்தேன். விஷுவல் கம்யூனிகேஷன் துறை மட்டும் தான் மாணவர்கள் விரும்பி படிக்கிற படிப்பு. நிறைய மாணவர்கள் உணர்ந்து ரசித்து படிக்கிறார்கள்.
உங்களுக்காக திரையுலகம் காத்துக் கொண்டு இருக்கிறது. கீழே அமர்ந்து இருக்கும் மாணவர்களில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். யூடியூப் மற்றும் ஓடிடி தளங்களில் மாணவர்கள், தங்களின் திறமையை நிரூபிக்க தேவையான இடங்கள் இருக்கிறது என்றார்.
இவ்விழாவில், தலைமை ஆசிரியர் தங்கவேல், தலைமை செயலாளர் பிஜு சாக்கோ, இயக்குனர் விருமாண்டி ஆகியோர் பங்கேற்றனர்.