மாணவர்களின் கனவை நினைவாக்கிய சூர்யா
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யா நடித்துள்ளார். கோடை விடுமுறையில் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை தழுவியே இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விமானம் மூலம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
காதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று மதியம் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானத்தில் பாடல் வெளியிடப்பட்டது. சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும் மாணவர்கள் 70 பேர் விமானத்தில் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் சூர்யா, சிவகுமார், இயக்குனர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டனர்.
இதற்காக முன்பே அனுமதி வாங்கப்பட்டு இருந்தது. சென்னை விமான நிலையத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். படமும் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியது என்பதால் விமானத்தில் வைத்து வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் எனப் படக்குழுவினர் கருதியுள்ளனர்.
விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மாணவர்களின் கனவை சூர்யா இதன்மூலம் நனவாக்கி உள்ளார். இதற்காக மாணவர்களுக்கு கட்டுரை போட்டி வைத்து தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் மாணவர்கள் 70 பேர் மட்டுமே இன்று விமானத்தில் சென்றனர். மீதமுள்ள 30 மாணவர்கள் தங்களுக்கு பதிலாக தங்களது பெற்றோர்களை அனுப்பி வைத்துள்ளனர். தங்களை விட தங்களது பெற்றோர்களுக்கு இந்த அனுபவம் கிடைக்க வேண்டும் என கருதி அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்.