மவுனப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் நடிக்கிறார். தற்போது காந்தி டாக்ஸ் என்ற பெயரில் உருவாகும் மவுனப் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
சிங்கிதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல் இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான புஷ்பக விமானா படமே கடைசியாக வெளியான மவுனப் படம் ஆகும். இந்தப் படம் தமிழில் பேசும்படம் என்ற பெயரில் வந்தது.
சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தியில் காந்தி டாக்ஸ் என்கிற மவுனப் படம் உருவாகிறது. இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர். இப்படத்தை கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “காந்தி டாக்ஸ் உணர்ச்சிகள் நிறைந்த இதயத்துக்கு நெருக்கமான படம். இதில் ஹீரோவாக நடிக்க இந்தியில் நிறைய நடிகர்களை பரிசீலித்தேன். யாரும் அதற்கு பொருந்தவில்லை. அப்போதுதான் விஜய்சேதுபதியின் நடிப்புத் திறமை தெரிந்து அவரை ஒப்பந்தம் செய்தேன்” என்றார்.