மழை வெள்ளத்தில் சிக்கிய பிகார் துணை முதலமைச்சர் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை மாலை முதல் தொடர்ந்து பெய்த மழையால் நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

பாட்னாவில் பெய்த கன மழையால் ராஜேந்திரநகரில் உள்ள துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடியின் வீடும் வெள்ளத்தால் சூழப்பட்டது. இதனால் அவரும், அவரது குடும்பத்தினரும் சனிக்கிழமையில் இருந்து வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இடைவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததால் பாட்னா நகரின் தாழ்வான பகுதிகளான ராஜேந்திர நகர், பாடலி புத்திரம் காலனி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடானது. 3 நாட்களுக்கு பிறகு நேற்று அந்த பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் சென்று துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடியையும், அவரது குடும்பத்தினரையும் பத்திரமாக மீட்டு, ரப்பர் படகின் மூலம் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 19 குழுவினர் ஈடுபட்டுள்ளனர். படகுகள் மூலம் இதுவரை 26 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி நிதிஷ்குமார் பார்வையிட்டார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கன மழையால் பீகார் மாநிலத்தின் பல்வேறு ரெயில் நிலையங்களிலும் வெள்ளம் புகுந்திருப்பதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. சில ரெயில்கள் வேறு வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பீகாரில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மேலும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பீகாரில் மட்டும் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி இதுவரை 29 பேர் பலியானதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதேபோல் உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.

நாடு முழுவதும் இந்த 4 நாட்களில் மட்டும் மழை தொடர்பான விபத்துகளில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools