த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகரில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டதை யாவரும் அறிந்ததே. வடகிழக்கு பருவமழை என்பது சராசரியாக அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யும். இக்காலகட்டங்களில் சென்னையில் மழைநீர் அதிகம் தேங்கும் இடங்களை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் ஆலோசனையின் பெயரில் சென்னையில் ராயபுரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வேப்பேரி, புளியந்தோப்பு, மயிலாப்பூர், அசோக் நகர், கே.கே. நகர் போன்ற இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மழைநீர் தேங்கும் இடங்களில் வடிகால் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஆனால் பணிகள் மந்தமாக நகர்வதை பார்த்தால் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்து முடிந்து விடும் போல் உள்ளது.
மேலும் இதனால் ஏற்கனவே இருந்த பாதிப்பை விட மிக அதிகமான பாதிப்பாக தான் இருக்கும். கே.கே. நகர், அசோக் நகர், நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறாமல் பல இடங்களில் துண்டு, துண்டாக பணி நிற்கிறது. இதனால் அங்கு குடியிருப்போரும், சாலையில் பயணிப்போறும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். ஆகவே. சென்னை மாநகராட்சி விரைவில் பணிகளை இடைநிற்றல் இல்லாம் தொடர்ந்து விரைவாகவும், முழுமையாகவும் முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.