மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு இன்று கன்னியாகுமரி வருகை
தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. கடந்த 12-ம் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டமே வெள்ளக் காடானது. பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15-ம் தேதி நேரில் ஆய்வுசெய்தார். தோவாளை பகுதியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வுசெய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சீரமைப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, மழை, வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நேற்று தமிழகம் வந்தடைந்தது.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் இன்று கன்னியாகுமரிக்கு செல்கின்றனர்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தரும் இந்தக் குழுவினர், அதன்பின் அங்கிருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு செல்ல உள்ளனர்.
கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையில் வெள்ள சேதம் தொடர்பான புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின், வடக்கு தாமரைக்குளம், குமாரகோவில், பேயன்குழி, வைக்கல்லூர் ஆகிய பகுதிகளில் 11 இடங்களில் சேதங்களை மத்திய குழுவினர் பார்வையிட உள்ளனர். இதன்பின், அவர்கள் இரவு மீண்டும் தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.