Tamilசெய்திகள்

மழையால் சென்னையில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம் இதோ

சென்னை மழை வெள்ளத்தால் முக்கிய சாலைகளில் ஆறு போன்று தண்ணீர் ஓடுகிறது. எனவே அந்த சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. எந்தெந்த இடங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது? என்பது குறித்து வாகன ஓட்டிகள் அறிந்து கொண்டு பயண திட்டத்தை வகுப்பதற்கு வசதியாக போக்குவரத்து போலீசார் சார்பில் அவ்வப்போது பத்திரிகை குறிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மழை தண்ணீர் தேக்கம் காரணமாக வியாசர்பாடி, மேட்லி சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்டரகான்ஸ் சாலை சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு போலீஸ்நிலையம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. எனவே வாகனங்கள் ஸ்டரகான்ஸ் சாலை மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டு வருகின்றன. விஜயராகவாச்சாரி சாலையில் மழைநீர் வடிகால் பணி நடைபெறுவதால் அண்ணாசாலை- வி.ஆர்.சாலை சந்திப்பில் இருந்து ஜி.என்.செட்டி சாலை, தியாகராயநகர் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை சுந்தர் ரோடு வழியாக ஜி.என்.செட்டி சாலையை சென்றடையும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தியாகராயநகர் திருமலைப்பிள்ளை சாலை காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர்கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாணி மஹால், பென்ஸ் பார்க் சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.