Tamilசெய்திகள்

மழைநீர் வடிகால் பணிகள சிறப்பாக மேற்கொண்டதால் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை – சென்னை மாநகராட்சி கமிஷனர்

சென்னையில் மழைநீர் அப்புறப்படுத்தும் பணி குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-

சென்னையில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மண்டல வாரியாக கண்காணித்தும் வருகிறோம். ஒரு பக்கம் புதிய வடிகால் பணிகள், இன்னொரு பக்கம் ஏற்கனவே உள்ள பணிகள் சீரமைப்பு என பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை 5 மாதங்களுக்கு முன்பே மாநகராட்சி கையாள தொடங்கிவிட்டது. இதனால் கடந்த காலங்களில் சென்னையில் அதிகம் மழைநீர் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்ட இடங்களில் தற்போது தண்ணீர் தேங்கவில்லை. ஒரு சில இடங்களில் மிக குறைவாகவே மழைநீர் தேங்கியிருந்ததை பார்க்க முடிந்தது. அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் வடிந்துவிட்டது.

மழைநீர் வடிகால் பணிகளை சிறப்பாக மேற்கொண்டதின் விளைவை தற்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக வாரக்கணக்கில் மழைநீர் அப்புறப்படுத்தப்படும் பகுதியான சீதம்மாள் காலனி பகுதியில் இப்போது மழைநீர் தேங்கவில்லை. ஓரிரு இடங்களில் தேங்கிய மழைநீரும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.

ராஜமன்னார் சாலையில் எப்போதுமே மழைநீர் தேங்கி நிற்கும். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. எனவே எந்தெந்த இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்ததோ அந்த இடங்களில் மழைநீர் இப்போது தேங்காத நிலை இருக்கிறது. அந்த வகையில் நிறைய இடங்களில் எங்களுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது. பொதுவாக தொழில்நுட்ப வசதிகளை வைத்து பார்க்கும்போது எங்களுக்கு திருப்திதான் கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.