2023-ம் ஆண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ந் தேதி தொடங்கியது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தி அவையை தொடங்கி வைத்தார். அதன் பிறகு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13-ந் தேதி வரை நடைபெற்றது. 2-வது அமர்வு மார்ச் 13-ந் தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெற்றது. அதானி விவகாரத்தால் பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன.
இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் 20-ந் தேதி முதல் ஆகஸ்ட் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
குறிப்பாக, மணிப்பூர் கலவரம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது.