மல்யுத்த வீரர்களின் குரல் மிதிக்கப்படுகிறது – பிரியங்கா காந்தி கண்டனம்
பாலியல் புகாரில் சிக்கியுள்ள இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றதை ஒட்டி போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தடையை மீறி பாராளுமன்றத்தை நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்தினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி டுவீட் செய்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மல்யுத்த வீரர்களின் மார்பில் இருக்கும் பதக்கங்கள் நம் நாட்டின் பெருமை. அந்த பதக்கங்களாலும், விளையாட்டு வீரர்களின் கடின உழைப்பாலும் நாட்டின் கவுரவம் அதிகரிக்கிறது. பாஜக அரசின் ஆணவம் அதிகமாகிவிட்டதால், நமது பெண் வீராங்கனைகளின் குரலை அரசு இரக்கமின்றி மிதித்து வருகிறது. இது முற்றிலும் தவறு. அரசின் திமிரையும், அநீதியையும் முழு நாடும் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.