மலையாள திரையுலகில் இளம்பெண் டைரக்டராக திகழ்ந்தவர் நயனாசூரியன், (வயது 28). திருவனந்தபுரம் வெள்ளையம்பலத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து நயனாசூரியன் வசித்து வந்தார்.
இந்த குடியிருப்பில் நயனாசூரியன் மட்டும் தனியாக குடியிருந்து வந்தார். அங்கிருந்து காரில் தினமும் படப்பிடிப்பிற்கு சென்று விட்டு இரவு தனது குடியிருப்புக்கு திரும்பி விடுவார்.
இந்த நிலையில் நேற்று காலை நயனாசூரியனின் செல்போனுக்கு அவரது தோழிகள் போன் செய்தனர். பலமுறை முயற்சி செய்தபோதும், அவரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் இதுபற்றி திருவனந்தபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், நயனாசூரியன் வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.
கதவை தட்டியபோது, திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு படுக்கை அறையில் டைரக்டர் நயனாசூரியன் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவரது உடல் திருவனந்தபுரம் மானவீயம் பகுதியில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
ஏராளமான திரையுலகினர் அங்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. நயனாசூரியன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தோழிகள் கூறி உள்ளனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நயனாசூரியன், பிரபல மலையாள டைரக்டர்கள் லெனின் ராஜேந்திரன், ஜித்து ஜோசப், பிஜு ஜோசப் ஆகியோரிடம் பல படங்களில் உதவி டைரக்டராக பணியாற்றி உள்ளார். பிரபல நடிகர் மம்முட்டி நடித்த படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 2017-ம் ஆண்டு மைதிலி-விஜய்பாபு நடித்த படத்தையும் இயக்கி உள்ளார். சமீபத்தில் பக்ஷி களுடே மணம் என்ற சினிமாவுக்கு திரைக்கதை எழுதி இயக்கினார்.
இவரது சொந்த ஊர் கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளி ஆகும்.