மற்ற கேப்டன்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் டோனி மிக அமைதியானவர் தான் – கவுதம் காம்பீர்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து சமீபகாலமாக பல கிரிக்கெட் வீரர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்திய அணிக்கு 2 உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்தவர் டோனி. 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பையையும், 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் அவர் தலைமையிலான அணி கைப்பற்றியது.
கிரிக்கெட் உலகில் டோனியை “கேப்டன் கூல்” என்று பொதுவாக அழைப்பது உண்டு. அதாவது மிகவும் நெருக்கடியான நேரத்தில் கூட அவர் பொறுமையை இழக்க மாட்டார். மேலும் சக வீரர்களை கடுமையாக பேசமாட்டார்.
தனது உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். மிக முக்கியமாக மைதானத்தில் போட்டியின்போது கோபப்படமாட்டார். ஆனால் சில நேரங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்ட சம்பவங்கள் நடந்தாலும் மற்ற கேப்டன்களை ஒப்பிடுகையில் டோனி கூல் கேப்டன் தான்.
இந்த நிலையில் டோனி கோபம் அடைந்ததை 2 முறை பார்த்து இருக்கிறேன் என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது;-
டோனி பொதுவாக கோபப்படமாட்டார் என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் அவர் கோபப்பட்டு நான் இரண்டு முறை பார்த்திருக்கிறேன்.
2007 மற்றும் 2011 உலக கோப்பையில் சில நேரங்களில் நாங்கள் சிறப்பாக ஆடாத போது டோனி கோபப்பட்டு இருக்கிறார்.
அவரும் மனிதர்தானே. அவருக்கு வரும் கோபம் நியாயமானதாகவே இருக்கும். அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது.
ஐ.பி.எல்.போட்டிகளின் போது பீல்டிங்கை சரி செய்யாத வீரர்கள் மீதும் கோபப்பட்டு இருக்கிறார்.
ஆனாலும் டோனி அமைதியானவர் தான். உலகில் மற்ற கிரிக்கெட் கேப்டன்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் டோனி நிதானமானவர்தான். கேப்டன் கூல் தான்.
2011 உலக கோப்பை இறுதி போட்டியில் காம்பீர்- டோனி ஜோடியின் ஆட்டம் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.