மற்ற கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.கவில் இணைய விரும்புகிறார்கள் – தேவேந்திர பட்னாவிஸ்
பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்தில் செய்யப்பட்ட குளறுபடி காரணமாகவே பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ததாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், பழைய வாக்குசீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வரும் 21-ந் தேதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில் ரத யாத்திரை மேற்கொண்டுவரும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கோண்டியா மாவட்டத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டன. இதை மூடி மறைக்கவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை ஆயுதமாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
வாக்குப்பதிவு எந்திரத்திற்கு எதிரான மெகா போராட்டம் சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா தோல்விக்கு வழிவகுக்கும். எதிர்க்கட்சிகள் நிச்சயம் வரலாறு காணாத தோல்வியை அடையப்போகிறது. தனது சொந்த தொகுதி மக்கள் ஏன் தங்களை புறக்கணித்தனர் என்பதை எதிர்க்கட்சிகள் ஆராய வேண்டும். அவர்கள் பல்வேறு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். ஆனால் மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. மக்கள் போராட்டதை முன்னெடுத்து நடத்தினால் அதை நாங்கள் கருத்தில் கொண்டு தீர்த்துவைக்க முயற்சி செய்வோம்.
மற்ற கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் பா.ஜனதாவில் இணைய விரும்புகின்றனர். ஆனால் மக்களின் ஆதரவை பெற்றவர்களையும், எந்த ஊழலிலும் தொடர்பு இல்லாதவர்களை தான் நாங்கள் கட்சியில் இணைத்து கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.