உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை புரட்டி எடுத்து வருகிறது. வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கையிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
அந்நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவுவதை தடுக்கவும், உயிரிழப்பை குறைக்கவும் அமெரிக்காவில் மருத்துவத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வைரஸ் தொடர்பான தகவல்களை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தினமும் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவண்ணம் இருந்தார்.
ஆனால் தனது அரசுக்கும் விரோதமான கேள்விகளை கேட்பதிலேயே ஊரடங்கள் முக்கியத்துவம் கொடுப்பதால் வெள்ளைமாளையில் நடைபெற்றுவந்த கொரோனா தொடர்பான செய்தியாளர்களை சந்திப்பை அதிபர் டிரம்ப் ரத்து செய்தார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் பிரபல நாளிதழதான நியூயார்க் டைம்சில் வெளியான செய்தியில், அதிபர் டிரம்ப் காலை மற்றும் மாலை பொழுதில் வெள்ளை மாளிகையில் உள்ள மிகப்பெரிய படுக்கையறையில் இருந்து கொண்டும், உணவு உண்ணும் அறையில் விஷேசமாக தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிட்டுக்கொண்டும், நாள் முழுவதும் தொலைக்காட்சியை பார்த்து தனது பொழுதை கழிப்பதாக குற்றச்சாட்டப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
”நான் அதிகாலை முதல் நள்ளிரவு வரை அதிபர் பணியை செய்து வருகிறேன். வியாபார ஒப்பந்தம், ராணுவ கட்டமைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்றதை தவிர பிற காரணங்களுக்காக நான் வெள்ளைமாளிகையை விட்டு வெளியே சென்று பல மாதங்களாகிவிட்டது.
நியூயார்க் டைம்ஸ் இதழில் என்னது அலுவலக வேலைகள் குறித்தும் எனது உணவு முறை குறித்தும் எழுதப்பட்டிருந்த கட்டுரையை நான் படித்தேன். அது என்னைப்பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாத ஆசிரியாரால் எழுதப்பட்டுள்ளது’’ என்றார்.
அவர் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், ”என்னையும், அமெரிக்காவின் வரலாற்றையும் தெரிந்த மக்கள் நான் தான் மிகவும் கடுமையாக உழைக்கும் அதிபர் என்று கூறுகிறார்கள். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் நான் ஒரு கடுமையான உழைப்பாளி. அமெரிக்க வரலாற்றில் மற்ற அதிபர்கள் செய்ததை விட கடந்த மூன்றரை ஆண்டுகளில் நான் சிறப்பாக செயல்பட்டுள்ளேன்’’ என்றார்.