திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
கிராம மக்கள் வாழ்க்கையில் பொருளாதாரம் அடையவேண்டும் என்பதற்காக கறவை பசுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கறவை பசுக்கள் மட்டுமின்றி இலவச ஆடுகளும் வழங்கப்படுகின்றன.
தமிழக பட்ஜெட்டில் கல்விக்கென ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செம்பட்டியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி நாரயாணசாமிக்கு மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கைகள் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 58 வயது வரை அரசு வேலை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே சுகாதாரத் துறையில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர். அவரது வழியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் ஆட்சி செய்தார்.
இவ்வாறு பேசியதும் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் சீனிவாசன் பேசும் கூட்டங்களில் எல்லாம் இதுபோன்ற சர்ச்சை பேச்சுகள் தொடர்ந்து வரும் நிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடந்த கூட்டத்திலும் சீனிவாசன் பேசிய பேச்சால் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய பட்ஜெட்டை பற்றி விமர்சனம் செய்திருப்பது அவரது சொந்த கருத்து. அதைப்பற்றி அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள். தினகரனுக்கு பட்ஜெட் என்றாலே என்ன என்று தெரியாது. அவர் தமிழக பட்ஜெட்டை குறைசொல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பேசி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமத்தில் இதுவரை யாரும் பஸ் மறியலில் ஈடுபடவில்லை. தமிழக பட்ஜெட்டை பிரதமர் மோடியே பாராட்டி உள்ளார். தமிழக அரசியல் கட்சியினர் எங்கள் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குறை கூறி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.