X

மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு தேவையில்லை! – மத்திய அரசு திட்டம்

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன் சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கி உள்ளது. அதில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்துடன் கூடிய வரைவு மசோதா, விரைவில் மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று மத்திய அரசு உயரதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு பிறகு, நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

புதிய திருத்தத்தின்படி, எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வு, நாடு முழுவதும் ‘நேஷனல் எக்ஸிட் டெஸ்ட்’ (நெக்ஸ்ட்) என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்தப்படும். அந்த தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு தேர்வை முடித்த பிறகு, முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக அவர்கள் நீட் போன்ற எந்த நுழைவுத்தேர்வும் எழுத வேண்டியது இல்லை. பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல், எம்.பி.பி.எஸ். முடித்த பிறகு, டாக்டராக தொழில் செய்வதற்கான லைசென்ஸ் பெற மாணவர்கள் எந்த தேர்வும் எழுத வேண்டியது இல்லை.

இருப்பினும், ‘எய்ம்ஸ்‘ மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனி நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற விதிமுறை நீடிக்கும். டி.எம்., எம்.சிஎச் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வும் நீடிக்கும்.

அங்கீகாரம் இன்றி டாக்டர் தொழில் செய்பவர்களுக்கு ஓராண்டுவரை கடும் காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையில் ஒரு திருத்தம் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Tags: south news