X

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு விரைவில் தொடங்குகிறது

தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை சேர்த்து 37 அரசு மருத்துவக்கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் போக 4,277 எம்.பி.பி.எஸ். இடங்களும், 175 பி.டி.எஸ். இடங்களும் உள்ளன.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வையும் மருத்துவக் கல்வி இயக்ககம் நடத்துகிறது.

இதன்படி 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு டிசம்பர் 19-ந்தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்தனர்.

நேற்று மாலையுடன் விண்ணப்பம் பதிவு செய்வதற்கு அவகாசம் முடிந்தது. 40 ஆயிரத்து 288 பேர் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து தகுந்த ஆவணங்களுடன் நேரிலோ, தபால் வாயிலாகவோ, செயலர், மருத்துவக் கல்வி இயக்ககம், 162, ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், 10 என்ற முகவரியில் 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2 வாரத்துக்குள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் வசந்தாமணி தெரிவித்தார்.

அகில இந்திய இடஒதுக்கீட்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வு கவுன்சிலிங் முடிந்ததும் மாநில அளவிலான கவுன்சிலிங் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தேசமாக இன்னும் 2 வாரத்தில் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

மருத்துவ பட்டப்படிப்பு, மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மருத்துவ கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது 25,511 மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 14,777 மாணவர்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வருவதன் மூலம் 1450 இடங்கள் கூடுதலாக கிடைக்கின்றன. இதை தவிர கோவை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 இடங்களும் கிடைக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சென்னையில் மருத்துவ கலந்தாய்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அகில இந்திய ஒதுக்கீடுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தவுடன் இதற்கான தேதி அறிவிக்கப்படும்.