மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
நீட் தேர்வில் தாமதம், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு, ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட காரணங்களால், மருத்துவ படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையில், ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் www.mcc.nic.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் வரும் 24-ம் தேதி (நண்பகல் 12 மணி) வரை பதிவு செய்யலாம்.
வரும் ஜனவரி 20-ம் தேதி முதல் ஜனவரி 24-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.
ஜனவரி 25, 26-ம் தேதிகளில் அவற்றை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஜனவரி 27, 28-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் ஜனவரி 29-ம் தேதி வெளியிடப்படும். ஜனவரி 30-ம் தேதி முதல் பிப்.4-ம் தேதிக்குள் இடஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
கலந்தாய்வின் இரண்டாம் சுற்று பிப்ரவரி 9-ம் தேதியும், 3-ம் சுற்று மார்ச் 2-ம் தேதியும், 4-ம் சுற்று மார்ச் 21-ம் தேதியும் தொடங்குகின்றன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
இளநிலை, முதுநிலை அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வந்ததும், தமிழகத்தில் மாநில அரசு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.