மருத்துவ படிப்புகளுக்கான கட்டண விபரம் வெளியானது

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் ஒரு ஆண்டுக்கு மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் எவ்வளவு? என்பது குறித்த தகவல்களை மருத்துவ மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, அதிகபட்சமாக அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.13 ஆயிரத்து 610-ம், அரசு பல் மருத்துவ படிப்புக்கு (பி.டி.எஸ்.) ரூ.11 ஆயிரத்து 610-ம், அரசு நிரப்பும் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.4 லட்சமும், ஈரோடு பெருந்துறை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.3 லட்சத்து 85 ஆயிரமும், கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.1 லட்சமும், ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவ படிப்புக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் ஓ.சி., பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர்களுக்கு என்று தனியாக கட்டணம் உள்ளது. அதேபோல், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் வரையிலும், பல் மருத்துவ இடங்களுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளில் இருக்கும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரமும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரி மட்டும் ஆண்டுக்கு ரூ.48 ஆயிரத்து 330-ம், என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு ரூ.20 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல், தனியார் கல்லூரிகளில் உள்ள பல் மருத்துவ படிப்பு இடங்களுக்கு ரூ.6 லட்சமும், என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு ரூ.9 லட்சமும் கட்டணமாக உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools