X

மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நோய்த்தொற்று கட்டுப்படுவதைப் பொறுத்து அவ்வப்போது அரசு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது.

கடந்த மாதம் 28-ம்தேதி ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி நோய்த்தொற்று சதவீதத்தின் அடிப்படையில் 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன.

முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 2-வது வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்பட 23 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. 3-வது வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் உள்ளன.

இதில் 3-வது வகையில் இடம்பெற்றுள்ள 4 மாவட்டங்களுக்கும் கூடுதலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மற்ற 2 வகை மாவட்டங்களுக்கும் தளர்வுகளுடன் கூடிய கூடுதல் கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. இந்த ஊரடங்கு வரும் 5-ம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து இன்று காலை 11 மணிக்கு சென்னை கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ வல்லுனர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது தற்போதைய கொரோனா தொற்று நிலவரங்களை ஆய்வு செய்து அதற்கு ஏற்ற வகையில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் தளர்வுகள் அறிவிப்பது பற்றி முடிவு எடுக்கப்படுகிறது.

முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களிலும் இன்னும் பொதுப்போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. வெளியூர்களுக்கு செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை உள்ளது. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.

கொரோனா தொற்று மாநிலம் முழுவதும் குறைந்து இருப்பதால், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.