சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புற்றுநோய், வலி மற்றும் நாள்பட்ட நிவாரண சிகிச்சைக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் ரேடியோ அலைவரிசை சிகிச்சை கருவியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
மேலும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் கருவியையும் வழங்கினார். மாதவிலக்கு நின்ற பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகளுக்கு கவுன்சிலிங் வழங்க சிறப்பு முகாமையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ கல்வியை வட மாநிலங்களில் இந்தியில் கற்றுக்கொடுப்பதை போல் தமிழ்நாட்டில் தமிழில் கற்றுக்கொடுப்பதற்காக மருத்துவ பாடங்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிவடையும்.
அதன்பிறகு கல்வியாளர்கள் ஆலோசனை பெற்று முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து நடைமுறைப்படுத்தப்படும். தென்காசி, மயிலாடுதுறை உள்பட 6 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு ஆஸ்பத்திரிகளில் முழு உடல் பரிசோதனை செய்ய ரூ.1000 முதல் ரூ.3 ஆயிரம் வரை 3 விதமான கட்டணங்கள் நடைமுறையில் உள்ளது. தற்போது ஸ்டான்லி ஆஸ்பத்திரி சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் இருப்பதால் அவர்கள் பயன்பெறும் வகையில் இனி முழு உடல் பரிசோதனைக்கான கட்டணம் ஸ்டான்லியில் மட்டும் ரூ.1000 மட்டுமே வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.