X

மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் – ஜி.கே.வாசன் அறிக்கை

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை தினந்தோறும் 30 ஆயிரத்தை தொடுகிறது. அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன.

பல இடங்களில் படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியுறுகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

அரசு மருத்துவனையின் மருத்துவர்களும், செவிலியர்களும், ஓய்வின்றி பணியாற்றி வருகின்றனர். அதிகமான நோயாளிகள் இருப்பதால் அனைவர் மீதும் கவனம் செலுத்த முடியாமல் திணரும் நிலை ஏற்படுகிறது. பல நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு செல்லாமலேயே தொடர்ந்து பணியாற்றுகிறார்கள்.

அதனால் அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தமும், உடற்சோர்வும் ஏற்படுகிறது. சரியான ஓய்வு இருந்தால் தான் அவர்களால் திறம்பட செயலாற்ற முடியும். ஆகவே முறையான சுழற்சி முறையில் பணியாற்றக்கூடிய நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும்

அதனால் அரசு மருத்துவமனையில் அதிகமான மருத்துவர்களும், செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள். தமிழக அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்களின் பற்றாக்குறையை போக்க, தகுந்த உடனடியான ஏற்பாட்டினையும், நடவடிக்கையையும் ஏற்படுத்த வேண்டும்.

அப்பொழுது தான் மருத்துவ துறையை சேர்ந்த அத்துனை பேரும் தங்களையும் காத்து, மக்களையும் காக்கும் உன்னத நிலை ஏற்படும். ஆகவே அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.